பதிவு செய்த நாள்
06
மார்
2012
10:03
தென்காசி :தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் இன்று (6ம் தேதி) மாசி மகப் பெருவிழா தேரோட்டம் நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மகப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் ஏக சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதி எழுந்தருளல், அபிஷேக தீபாராதனை, மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இரவு மண்டகப்படிதாரர் தீபாராதனை, சுவாமி-அம்பாள் சப்பரத்தில் திருவீதி எழுந்தருளல் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று (6ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள் திருவீதி எழுந்தருளல், பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முதலில் சுவாமி தேரும், அதனை தொடர்ந்து அம்பாள் தேரும் வடம் பிடிக்கப்படுகிறது. முன்னதாக விநாயகர், முருகன், பராக்கிரமபாண்டியன் சப்பர பவனி நடக்கிறது. தேர்கள் நிலை வந்து சேர்ந்ததும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, தீபாராதனை நடக்கிறது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இரவு வணிக வைசியர் சமுதாய மண்டகப்படி தீபாராதனை, கனக பல்லக்கில் சுவாமி-அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. விழாவின் பத்தாம் நாளான நாளை (7ம் தேதி) காலையில் தீர்த்தவாரி, தட்சிணாமூர்த்தி பூஜை, அபிஷேக, தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் புஷ்பாஞ்சலி, நாதஸ்வர கச்சேரி, மகாலட்சுமி பூஜை, இரவு வயலின் இன்னிசை கச்சேரி, மெல்லிசை கச்சேரி, சிறப்பு பல்சுவை கலை நிகழ்ச்சி, நாடார் சமுதாய மண்டகப்படிதாரர் தீபாராதனை, ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் திருவீதி வலம் வருதல், அதிநவீன கம்ப்யூட்டர் வாணவேடிக்கை நடக்கிறது.