பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
சேலம்: தமிழ் புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளானோர் தரிசனம் செய்தனர்.
சேலம், பெங்களூரு பைபாஸ் சாலையையொட்டியுள்ள, ஐயப்பா ஆசிரமத்தில், விஷூ கனி தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள, ஐயப்பன் பஜனை மண்டலி, அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவில், காய்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ராஜகணபதி கோவிலில், காலையில் வெள்ளி கவசம், மாலையில் தங்க கவச சாத்துபடி செய்து, பூஜை நடந்தது. எல்லைப்பிடாரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், தங்க கவச சாத்துப்படி, அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், கோட்டை அழகிரிநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கடைவீதி லட்சுமி நாராயண பெருமாள், ஹம்ச வாகனத்தில் அருள்பாலித்தார். நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன், தங்க கவச சாத்துபடியில், விஷூ கனி தரிசனம் நடந்தது. உத்தமசோழபுரம் கரபுரநாதர், ஊத்துமலை முருகன், காளிப்பட்டி சென்றாய பெருமாள், இளம்பிள்ளை ஏரிக்கரை மாரியம்மன், ஆத்தூர், வெள்ளை விநாயகர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஊனத்தூர் அடிபெருமாள், ஓமலூர் பெரியமாரியம்மன், வாழப்பாடி காசிவிஸ்வநாதர், புதுப்பட்டி மாரியம்மன், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில், சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.
1,008 திருவிளக்கு பூஜை: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காளியம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 14ல்) இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், மழை பொழிய, மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி, 1,008 விளக்குகளால் சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பெண்கள், தரிசனம் செய்தனர்.
அய்யனார் மீது சூரிய ஒளி: தலைவாசல், ஆறகளூர், அரசு கால்நடை மருந்தகம் அருகே, பழமையான, அய்யனார் கோவில் உள்ளது. அங்கு, தற்போது சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, அய்யனார், அவரது மனைவிகளான, புஷ்பகலா, பூரணி ஆகிய சிலைகள் மீது, சூரிய கதிர்கள் விழுந்தன. அதை ஏராளமானோர் பார்த்து வணங்கினர். சித்திரை முதல் நாளில், அய்யனார் சிலை மீது, சூரிய கதிர்கள் விழுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு என, பக்தர்கள் தெரிவித்தனர்.