பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
02:04
ஊட்டி : ஊட்டி, குன்னூரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஊட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், பூச்சொரிதல் உற்சவத்துடன் விழா துவங்கியது. பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்த திருத்தேர் ஊர்வலத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று (ஏப்., 16ல்) நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வடம் பிடித்து துவக்கி வைத்தார். கோவில் வளாகத்தில் துவங்கிய திருத்தேர் ஊர்வலம், காபி ஹவுஸ் சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் வழியாக, இரவில் கோவில் வந்தடைந்தது.
வழி நெடுகிலும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற கோரி, பூஜை கொடுத்தும், திருத்தேரின் மீது, உப்பு மழை பொழிந்து அம்மனை பக்தி பரவசத்துடன் வழிப்பட்டு, தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர். பல்வேறு அமைப்புகளின் சார்பில், அன்னதானம், நீர்மோர், பிரசாத வினியோகம் செய்யப்பட்டது.
* குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் முக்கிய சித்திரை தேர் திருவிழா நடந்தது. துர்கையம்மன் கோவிலில் இருந்து நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. மதியம், 1:00 மணியளவில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. குன்னூர் நகராட்சி பொறுப்பு கமிஷனர் பாலமுருகன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். அதில், பக்தர்கள் உப்பு மழை பொழிந்து, வழிபட்டனர்.
விழாவில், இலவச மோர்பந்தல், கம்பங்கூள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று தையல் தொழிலாளர்களின், 92வது ஆண்டு பரி வேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 19ல் முத்து பல்லக்கு, 20ல் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கின்றன. மே, 10ல் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.