பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
01:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு, சித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் பாவாபேட்டை தெருவில்,
பழமையான சித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகத்தையொட்டி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 24ல், யாக சாலை பூஜைகள் துவங்கின.
கும்பாபிஷேக தினமான, நேற்று (ஏப்., 26ல்) காலை, 6:30 மணிக்கு, வரசித்தி விநாயகர் கோவில் மூலவர் கோபுரத்திற்கும், 7:15 மணிக்கு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசங்களின் மீது, புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காலை, 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, கன்னிவாக்கம் கிராமத்தில், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவில், புதிதாக கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில், பெருமாள், பத்மாவதி, ஆண்டாள், ஹயக்ரீவர், நாராயணன், நரசிம்மர், விஷ்ணுதுர்கை, தும்பிக்கை, ஆழ்வார், கருடாழ்வார் மற்றும் ஆஞ்நேயர் சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இக்கோவிலில், கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) துவங்கியது. நேற்று (ஏப்., 26ல்) காலை, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.