பதிவு செய்த நாள்
02
மே
2019
02:05
பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் நடைபெற்ற மாரியம்மன் திருக்கல்யாண விழாவில், பானைக்குள் எலியையும், பூனையையும் கிராம மக்கள் முன்னிலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சின்னதடாகம் அருகே உள்ள சோமையனூர் மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் கடந்த, 14ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, பூச்சட்டி எடுத்தல், அம்மனுக்கு நகை எடுத்துவருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சக்தி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜைகளும் நடந்தன. நேற்று (மே., 1ல்) அதிகாலை எருது கட்டுதல் விழா நடந்தது.கோவில் முன் பக்தர்கள்ஆழமான குழி தோண்டினர்.
பின், ஊர் மக்கள் புடை சூழ பூனை மற்றும் எலி ஆகியவை வைக்கப்பட்ட பானை, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பானை, வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு இருந்தது. அது கோவில் முன் தோண்டப்பட்ட குழிக்குள் பத்திரமாக வைத்து, மேற்புறம் மூங்கிலால் உருவாக்கப்பட்ட படலால் மூடினர்.
பின்னர் பக்தர்கள் தாரை, தப்பட்டை மற்றும் மூங்கில் தடிகளை ஒன்றுடன் ஒன்று தட்டி, பலத்த ஓசை எழுப்பினர். பக்தர்கள் குழியை சுற்றி, சுற்றி வந்தனர். குழி அருகே நிறுத்தப்பட்டு, துள்ளி குதித்த எருதை பக்தர்கள் அடக்கினர். சுமார் ஒரு மணி நேரம் ஆராவாரத்துக்கு பின், மூங்கில் படலை விலக்கி, குழிக்குள் இருந்த பானையை வெளியே எடுத்தனர். பின், மறைவான இடத்துக்கு கொண்டு சென்று, பானையில் இருந்து பூனை மற்றும் எலியை வெளியேற்றினர்.
இது குறித்து, பக்தர்கள் கூறுகையில், பானைக்குள் எலி மற்றும் பூனையை வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின், அவை இரண்டையும் வெளியேற்றும்போது எலி எவ்வித பாதிப்பும் இல்லாமல் பானைக்குள் இருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான், நாட்டில் மக்கள், எதிரிகள் அச்சம் இல்லாமல், நிம்மதியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. நேற்று (மே., 1ல்) நடந்த நிகழ்ச்சியில், எலி எவ்வித காயமும் இல்லாமல் துள்ளி குதித்து ஓடியது என்றனர். விழாவையொட்டி, நேற்று (மே., 1ல்) மதியம் மஞ்சள் நீராடுதல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.