பதிவு செய்த நாள்
07
மே
2019
03:05
ஓசூர்: லாரி வாடகையில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கோதண்டராமர் சிலையை கர்நாடகா வுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில் பிரதிஷ்டை செய்ய, 350 டன் எடையுள்ள கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
வனத்துறையினரின் அனுமதி மறுப்பால், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல் பள்ளம் பகுதியில், கடந்த பிப்., 8 முதல், 83 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த, 3 மாலை மீண்டும் புறப்பட்டு சின்னாறு பகுதிக்கு சென்றது. அங்கு தற்காலிக சாலையில், மேற்கொண்டு செல்ல முடியாமல், நேற்று முன்தினம் (மே., 5ல்) நிறுத்தப்பட்டது. நேற்று (மே., 6ல்) காலை, சிலை புறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோதண்டராமர் சிலையை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டதால், நேற்று (மே., 6ல்) மாலை வரை சிலை புறப்படவில்லை.
இது குறித்து, சூளகிரி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் வரை, கோதண்டராமர் சிலையை கொண்டு வர, ஒரு கோடியே, 26 லட்சம் ரூபாய், கார்கோ லாரிகளுக்கு வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. சின்னாறு பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலம் ஈஜிபுரா வரை செல்ல, 55 லட்சம் ரூபாய் வாடகை கேட்கப்படு வதாக தெரிகிறது. 10 லட்சம் ரூபாயை வழங்க, சிலை கொண்டு செல்லும் குழு முன்வந்த நிலையில், மொத்த பணத்தையும் வழங்க, லாரி உரிமையாளர் தரப்பினர் கேட்டுள்ளனர். அதனால் நேற்று (மே., 6ல்)மாலை வரை சிலை புறப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.