சிவகாசி:சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா கடந்த 30 ல் துவங்கியது. விழாவில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் புரிந்தார். 11 நாட்கள் நடந்த சித்திரை விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்கினிசட்டி, கயர்குத்து, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை என நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சியுடன் நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர்.