மானாமதுரை:மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள காவேரி அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகேயுள்ள தஞ்சாக்கூர் பூர்ண,புஷ்கலா காவேரி அய்யனார் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 வருடங்கள் ஆகி விட்டதால் மீண்டும் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் மற்றும் கோயில் குடி மக்கள் முடிவெடுத்து கோயிலை மீண்டும் புதுப்பித்து கடந்த 8 ந் தேதி காலை யாகசாலையில் முதல் கால பூஜைகளும், கணபதி ஹோமமும்,விக்னேஷ்வர பூஜையும்,காயத்ரி ஹோமமும் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன. 9 ந் தேதி 2ம் கால பூஜையும், ருத்திரஹோமமும், மகாலெட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் 3 ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.நேற்று (மே., 10ல்) காலை 4 ம் கால பூஜைகள் நடைபெற்று தீர்த்த கடங்கள் புறப்பாடாகி அனைத்து கோபுர விமானங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தஞ்சாக்கூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.