பதிவு செய்த நாள்
11
மே
2019
04:05
புன்செய்புளியம்பட்டி: மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள், பொலிகாளை இழுத்து வழிபாடு நடத்தினர்.
புன்செய்புளியம்பட்டியில் பிளேக் மாரியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. பத்தாம் நாளான நேற்று முன்தினம் (மே., 9ல்), மழை
வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொலிகாளை இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏழு காளைகளை, மேளதாளம் முழங்க, மாதம்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து, காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பிளேக் மாரியம்மன் கோவில் முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை நிற்கவைத்து மரியாதை செய்து அதில் ஒரு காளை மட்டும் தேர்வு செய்து கம்பம் நடப்பட்ட இடத்தில் கீழே படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றி, மீண்டும் காளையை
அவிழ்த்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
மாரியம்மன் கோவில் முன் நடப்பட்ட கம்பத்தை சிவனாக உருவகித்து, வழிபாடு நடத்திய தாகவும் கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து, நந்தீஸ்வரரை வழிபட்டு ஒரு காளையை படுக்கவைத்து, ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை நடனம் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறு பூஜையுடன், விழா நேற்று (மே., 10ல்), நிறைவடைந்தது.