பதிவு செய்த நாள்
13
மே
2019
12:05
பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது. ராமச்சந்திரன் யானை வருகையால், பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். கேரளா, திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா, உலக பிரசித்தி பெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு மிகவும் பிரபலமானது.
யானைகள் அணிவகுப்புக்கு, பல ஆண்டுகளாகவே, 10.5 அடி உயரம் உள்ள, ராமச்சந்திரன் என்ற, 54 வயது யானை தலைமை வகிக்கிறது.பார்வை குறைபாடுஇந்த யானைக்கு, லேசான பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், இருவரை, இந்த யானை மிதித்து கொன்றது. இதனால், திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்க, ராமச்சந்திரன் யானைக்கு, கேரள அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, யானை உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதி மன்றம், திருச்சூர் மாவட்ட கலெக்டர் முடிவெடுக்க உத்தரவிட்டது. யானையை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானையின் உடல் நலம் நன்றாக உள்ளது. அதன் உடலில் எந்த காயமும் இல்லை; மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை என, அறிக்கை அளித்தனர்.இதையடுத்து திருச்சூர் பூரம் விழாவில், ராமச்சந்திரன் யானை பங்கேற்க, கலெக்டர் அனுமதி வழங்கினார். நேற்று காலை, நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலையை ஏந்தி, திருச்சூர் பூரம் விழாவில், ராமச்சந்திரன் யானை பங்கேற்றது.
வடக்குநாதர் கோவிலின், மேற்கு நடை வழியாக, கோவிலுக்குள் வந்த யானை, தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து, மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி, திருச்சூர் பூரம் திருவிழா, துவங்குவதாக அறிவித்தது.யானை சமயம்பூரம் திருவிழாவின் சிறப்பு அம்சமான, அலங்கரித்த யானைகளின் அணிவகுப்பில் குடைமாற்றம், இன்று மாலை நடக்கிறது. விழாவையொட்டி, இரண்டு நாட்களாக யானைகளின் ஆடை ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான, யானை சமயம் நடந்தது.இதை, பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். - நமது நிருபர் -