திருப்புத்துார்:திருப்புத்துார் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகவிழாவைமுன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் கடந்த மே 7 ல் கொடியேற்றம் நடந்து வைகாசி விசாக பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் மண்டகபடிதாரர் தீபாராதனை, வாகனங்களில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி வலம் வருகின்றனர். நேற்று காலை 6:30 மணிக்கு தேர்களுக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. தென்மாபட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. காலை 7:00 மணிக்கு சுவாமி,அம்பாள் பெண் வீட்டார் அழைப்பு ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் துவங்கியது. தொடர்ந்து திருத்தளிநாதர் கோயில் வாசலில் சுவாமியும்,அம்பாளும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அம்பாள் மணவறையில் தவத்திற்கு எழுந்தருளினார். பின்னர் வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் கரகோஷத்திற்கிடையே காலை10:25 மணிக்கு சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருத்தளிநாதர் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது.குன்றக்குடி பொன்னம்பலஅடிகள் பங்கேற்றார். பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.