பதிவு செய்த நாள்
15
மே
2019
02:05
காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் பொது உண்டியல் இன்று (மே., 15ல்)திறக்கப்படுகிறது. அரசு உத்தரவுபடி, உண்டியல் எண்ணும் பணியில், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அனுமதிக்கப் படுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப் படுகிறது.அந்தப் பணம், கோவில் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில் சில குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதை தவிர்க்கும் வகையில், அறநிலையத் துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில், கோவிலுக்கு பக்தர்கள் வரும் நேரத்தில், கோவில் உண்டியல்கள் திறக்க வேண்டும்; பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ண வேண்டும்; எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பதை, பக்தர்கள் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும் என, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உண்டியல் எண்ணி முடியும் வரை, வீடியோ எடுக்கவும் உத்தரவு உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், நடை சாற்றிய பின், உண்டியல் எண்ணப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பொது உண்டியல், இன்று (மே., 15ல்)திறக்கப்படுகிறது. அறநிலையத் துறை உத்தரவு பின்பற்றப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.