பதிவு செய்த நாள்
20
மே
2019
03:05
வடவள்ளி : மருதமலை கோவிலில், பக்தர்களிடம் பணம் வசூலித்துவிட்டு, டிக்கெட் கொடுக்காமல், பணியாளர் ஏமாற்றியதாக, அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, விசாரணை
நடக்கிறது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன், கர்நாடகாவில்
இருந்து, 35 பக்தர்கள் வந்திருந்தனர். சிறப்பு வழி தரிசனத்துக்கு டிக்கெட் கேட்டுள்ளனர். ஒரு நபருக்கு, 20 ரூபாய் வீதம், 700 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
கவுன்டரில் இருந்த கோவில் பணியாளர் அழகுவள்ளி, 35 பேருக்கு உரிய கட்டணத்தை வசூலித்துள்ளார். ஆனால், டிக்கெட் வழங்காமல், சுவாமி தரிசனத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கு சிறிது நேரம் கூட தரிசனம் செய்ய முடியாமல், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுதொடர்பாக, கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள், கோவில் நிர்வாக அலுவலகத்தில்,
அழகுவள்ளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) மேனகாவிடம் கேட்டபோது, பக்தர்கள் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிந்ததும் உரிய
நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.