வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதற்காக ஜூன் 1 முதல் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அமாவாசையான நேற்று தமிழகம், புதுச்சேரி, கர்நாடக பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவியத்துவங்கினர். காலை 6:00 மணி முதல், வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். அதிகாலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி கோயில்களில் மூலவர்களுக்கு அபிஷேகங்கள் நடந்தன. ராஜஅலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.
தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக செயல்அலுவலர் சிவராமசூரியன் கூறியிருந்தார். இருப்பினும் போதுமான உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை என பக்தர்கள் கூறினர். இன்றும் பகல் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயிலில் ஸ்டஷேன்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் நுழைவுபகுதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீஸ் எல்லையில் உள்ளது. கோயில் மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் ஸ்டஷேன் எல்லைக்குள் உள்ளது. இதனால் தற்போது கோயிலில் புறக்காவல்நிலையம் அமைக்கும்பணி நடக்கிறது.