ஒரு சமயம் காஞ்சிப்பெரியவர் மலைப்பிரதேசம் ஒன்றில் முகாமிட்டிருந்தார். பாடசாலையில் வேதம் படிக்கும் சிறுவர்கள் சிலரும் சுவாமிகளுடன் சென்றிருந்தனர். அப்போது குளிர்காலம். எளிய கீற்றுக்கொட்டகையில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் சிறுவர்கள் குளிரால் சிரமப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் சுவாமிகள். அவர்கள் போர்த்திக் கொள்வதற்காக சால்வைகள் வழங்க ஏற்பாடு செய்யும்படி நிர்வாகியிடம் உத்தரவிட்டார். சிறுவர்களுக்கு சால்வை கிடைத்ததா என்பதையும் நேரில் கேட்டு உறுதி செய்தார்.
அன்று சுவாமிகளிடம் ஆசி பெறுவதற்காக பண்டிதர் ஒருவர் வந்தார். மடத்தின் சார்பாக பண்டிதர்களுக்கு சால்வை போர்த்தி கவுரவிப்பது வழக்கம். அதனால் சால்வை ஒன்றை கொண்டு வரச் சொன்னார் சுவாமிகள். கைவசம் இருந்த சால்வை எல்லாம், சிறுவர்களுக்குக் கொடுத்து விட்டதால் நிர்வாகி சற்று திகைத்தார். ஆனாலும், யாருக்கும் தெரியாமல் சிறுவன் ஒருவனிடம் சால்வையை வாங்கினார். அதை பண்டிதருக்கு வழங்கி நிலைமையை சமாளித்தார். மகிழ்ச்சியுடன் பண்டிதரும் விடைபெற்றார். இரவு குளிரடிக்க தொடங்கியது. சிறுவர்கள் சால்வையைப் போர்த்தியடி உறங்கினர். சால்வை கொடுத்த சிறுவன் மட்டும் கை, காலைகளைக் குறுக்கியபடி தூங்க சிரமப்பட்டான். மறுநாள் விழித்த போது அவன் மீது கம்பளி போர்த்தியிருப் பதைக் கண்டான். குளிர் தாக்காமல் இரவு நன்றாகத் தூங்கியதை உணர்ந்தான். ’என்ன உன் மீது கம்பளி போர்த்தியதால் நன்றாக தூங்கினாயா?’ என்றார் நிர்வாகி. இரவில் என்ன நடந்தது என அவரிடம் விசாரித்தான்.
“உன்னுடைய சால்வையை பண்டிதருக்கு கொடுத்த விஷயம் சுவாமிகளுக்கு தெரிந்து விட்டது. ’ஏதேனும் கம்பளி இருக்கிறதா பார்’ எனக் கேட்டார். கம்பளி ஒன்று என்னிடம் உபரியாக இருப்பதைக் கண்டேன். உறக்கம் கலையாதபடி கம்பளியை உனக்கு போர்த்தும்படி தெரிவித்தார். நான் தான் உனக்கு கம்பளி போர்த்தினேன்” என்றார் நிர்வாகி. மகாபெரியவரின் தாயுள்ளத்தை அறிந்த சிறுவன் ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்.