பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
12:06
மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே சோழமாதேவி, குங்கும வல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதால், குடிலில் கண்ணாடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.அமராவதி ஆற்றங்கரையில் சோழர்கள் பல கோவில்களை அமைத்தனர். சோழ அரசியின் நினைவாக உருவாக்கப்பட்ட சோழ(ன்)மாதேவி கிராமத்தில், குங்கும வல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் கட்டப்பட்டது.
முழுவதும் கற்களால் அமைக்கப்பட்ட இந்தக்கோவில் பல நுாறு ஆண்டுகள் கடந்தும் நல்ல நிலையில் உள்ளது.இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து, பல ஆண்டுகள் கடந்ததால், கோபுர சிலைகள் வண்ணம் குறைந்து களையிழந்து போயின. கோவிலின் சுவர்களில் சில இடங்களில் பழுது ஏற்பட்டது. இவற்றை பராமரித்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, பொதுமக்களால், திட்டமிடப்பட்டது. இதற்காக பக்தர்கள் இணைந்து அறக்கட்டளை அமைத்து பணிகளை தொடங்கினர்.தற்போது, சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணி நடக்கிறது. இதனை தொடர்ந்து கோவிலுக்குள் பராமரிப்பு பணிகள் நடக்கும். அனைத்து பணிகள் நிறைவு பெற்ற பின், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும்.
இது குறித்து கோவில் அர்ச்சகர் பாபு கூறுகையில், கோவிலில் பணிகள் நடப்பதால், சாமியின் சக்தியை மட்டும் சில கண்ணாடிக்குள் புகுத்தி, அதை அருகிலுள்ள இடத்தில் வைத்து வழிபாடு நடக்கிறது. சிலைகள் இடமாற்றம் செய்யப்படாமல் கோவிலுக்குள்ளே இருக்கும். இதற்கான நிகழ்ச்சி, கோவிலில் நடந்தது. கோவில் பின்புறம் புதியதாக அமைக்கப்பட்ட, குடிலுக்குள் வைத்துள்ள கண்ணாடிகளின் வழியாக, இறைவன் அருள்பாலிப்பதாக ஐதிகம் உள்ளது. கண்ணாடிகள் முன்பு பூஜைகள் நடக்கிறது. பணிகள் நிறைவடைந்த பின்பு கோவிலை சுத்தப்படுத்தி, சாமிசக்தி கோவிலுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.