அருப்புக்கோட்டை: மனிதர்கள் தங்களின் மனபாரத்தையும், பிரச்னைகளையும் இறக்கி வைக்க கோயில்களை தான் நாடுகின்றனர். பிரச்னைகளின் உச்சத்தில் இருக்கம் போது, தெய்வங்களை நாடி, கோயில்களை தேடி ஓடுகின்றனர். தங்கள் கஷ்டங்களை தெய்வங்களிடம் முறையிட்டு அவை தீர நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்கின்றனர்.
அந்த வகையில் அருப்புக்கோட்டை அருகே ஏ. வெள்ளையாபுரத்தில் குடி கொண்டுள்ள பாதாள நாகேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் தன்னை வேண்டி வருபவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றி தருகிறார். இவ்ஊரில் உள்ள சந்திரமதி என்ற பக்தையின் கனவில் தோன்றிய அம்மன் “ஓடை பகுதியில் வெட்ட வெளியில் இருக்கிறேன். என்னை எடுத்து வணங்குங்கள். வேண்டிய வரம் கிடைக்கும், ” என கூற, ஓடை பகுதியில் இருந்த அம்மன் சிலையை எடுத்து, அம்மன் கூறியது போல் பாதாள நாகேஸ்வரி என பெயரிட்டு வணங்கி வருகின்றனர். அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். விவசாயம் பெருகும். தீராத நோய் தீரும். செவ்வாய், வெள்ளி கிழமைகள் விசேஷ நாட்கள். பவுர்ணமி அன்று அன்னதானமும் நடக்கிறது. உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களும் அம்மனை தரிசனம் செய்கின்றனர்.