பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
12:07
செஞ்சி: முக்குணம் முக்குன்றநாதர் கோவில் மண்டபத்தில் இருந்து, மூன்று மாதங்களாக, தண்ணீர் சொட்டி வருவது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, முக்குணம் கிராமத்தில், மலை குன்றில், 1,400 ஆண்டுகள் பழமையான, முக்குன்றநாத உடையார் கோவில் உள்ளது. பாறைகளுக்கு இடையே உள்ள இக்கோவிலில், 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது, கருவறை முன், புதிய மண்டபம் கட்டி, அதன் மீது, சிறிய கோபுரமும் அமைத்தனர். இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, வினாயகர், முருகன் சிலைகளும், இதன் கீழ், அவ்வையார் நின்ற நிலையில் உள்ள சிலையும் அமைத்துள்ளனர். மலையடிவாரத்தில் வினாயகர், ஆஞ்சநேயர், ஹயக்கிரீவர் சன்னதிகள் அமைத்து, ஏப்., 17ல், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, சிவன், பார்வதி மண்டபத்திற்கு, வர்ணம் அடிக்க சென்றபோது, மண்டப கோபுரத்தின் மையத்தில் உள்ள விளிம்பில் இருந்து, நிமிடத்திற்கு, இரண்டு சொட்டு தண்ணீர், தொடர்ச்சியாக, அவ்வையார் சிலை மீது விழுவது, தெரிய வந்தது.
பல முறை துடைத்தும், தண்ணீர் சொட்டிக் கொண்டே இருந்தது. இதனால், வர்ணம் பூசும் பணியை, சில நாட்கள் ஒத்திவைத்தும், தண்ணீர் சொட்டுவது நிற்கவில்லை. அதன்பின், அந்த இடத்தில், வர்ணம் அடித்தும், சரியாக ஒட்டவில்லை.தற்போது, கடும் வறட்சி நிலவும் நிலையில், இந்த மண்டபத்தில் இருந்து, மூன்று மாதங்களாக, நீர் கசிவது நிற்கவில்லை. மண்டபத்தின் மேல்தளத்தில், மழைநீர் தேங்கவில்லை. மூன்று மாதங்களாக, சீராக, மண்டபத்திலிருந்து தண்ணீர் சொட்டி வருவது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.