பதிவு செய்த நாள்
20
மார்
2012
10:03
மார்த்தாண்டம் : பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தல சமபந்தி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கடந்த சுமார் 400 ஆண்டுகளாக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும், அன்பிற்கும் முன்னுதாரணமாக பள்ளியாடி பழைய பள்ளி அப்பாத்திருத்தலம் திகழ்ந்து வருகிறது. தற்போது பழைய பள்ளி திருத்தலம் இருக்கும் இடம் அடர்ந்த காடாகவும், அங்கு புலிகள் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடம் புலிக்குட்டிவிளை என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் காடுகளை அழித்து அங்கு எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். அப்பகுதியில் பரவிய வைசூரி, காலரா போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி வழிபாடுகள் நடத்தினர்.
இங்கு இறைவனை ஜோதி வடிவாக மக்கள் வழிபடுகின்றனர். இங்கு வந்து வழிபடும் மக்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பது நம்பிக்கை. இதனால் பக்தர்கள் திருத்தலத்திற்கு வாழைக்குலைகள், மலர் மாலை, எண்ணெய், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வதுடன், அன்னதானமும் நடக்கிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். திருத்தலத்தின் அருகில் சுமார் 400 ஆண்டுகள் பழக்கமுடைய பெரிய புளிமரமும், பழமையான கிணறும் அமைந்துள்ளது. எந்த கோடையிலும் கிணற்று நீர் வற்றாமல் உள்ளது. புளியமரத்தின் வேர்கள் மண்ணின் வெளிப்பகுதியில் தெரிவதில்லை. திருத்தலத்தில் சர்வமத பிரார்த்தனையும், சமபந்தி விருந்தும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது திங்கட்கிழமை நடக்கிறது. இந்த ஆண்டுவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பல்வேறு சமய சான்றோர்கள் பங்கு கொண்ட மதநல்லிணக்க விழா நடந்தது. நேற்று நடந்த சமபந்தி விருந்தை பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை ராபர்ட் துவக்கி வைத்தார். இரவிபுதூர்கடை ஜமாத் ஹைதர் அலி, வள்ளலார் பேரவை அமைப்பாளர் சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மரிய வின்சென்ட், திருத்தல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடந்தது. தக்கலை டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.