தவம் செய்தால் நலம். தவம் செய்தவர்க்கே எல்லாம் கிடைக்கிறது. மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் என்பாள் ஒளவை. எனவே தவம் செய்ய எல்லோரும் ஆசைப்படுவோம். ஆனால் இயலுமா என்பதே கேள்வி. ஆயினும் தவம் செய்வோம் வாருங்கள் என்று நம்மை அழைக்கின்றார் மகாகவி பாரதியார். நாமும் நமக்குத் தெரிந்தவரை உடனே ஒரு ஆசனத்தை இட்டு, நேரே அமர்ந்து கண்களை மூடிக் கொள்கின்றோம். யாரேனும் கொஞ்சம் பேசினால் கூட, கண்களைத் திறந்து நெற்றிக் கண்ணாக்கிப் பார்க்கின்றோம். தவம் என்றால் நமக்கு புரிந்தது இது தான். ஆனால் மகாகவி பாரதி தவம் என்னும் சொல்லிற்கு, அன்பு என்னும் அர்த்தத்தை சொல்கிறார். தவத்தால் மனம் பக்குவம் அடைந்தவர்களின் இயல்பு எதிர்பார்ப்பு இல்லாத அன்புதானே. எனவே அன்பு செய்யக் கற்றுக் கொள்வோம் என்கிறார் பாரதியார். நாங்க எல்லோரும் அன்பு செய்து கொண்டு தானே இருக்கின்றோம் என்ற சொல் காதில் விழுகின்றது.
நம்முடைய அன்பு எதிர்பார்ப்புடைய அன்பாகவே ஆகிவிட்டது. இதனை இவருக்கு செய்தால் அதனால் நமக்கென்ன நன்மை என்ற கேள்வி மனதின் ஆழம் வரை பாய்ந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்கட்டும் என்ற நோக்கில் வீட்டு வாசலில் திண்ணை, சுமை தாங்கிக் கற்கள், தண்ணீர் பந்தல், அன்னச் சத்திரங்கள் என்று முன்னோர் செய்த தர்மங்கள் காணாமல் போயின. காடுகளில் விலங்குகள் தண்ணீர் குடிக்க தொட்டிகள் அமைத்தல் அவற்றுக்கு முதுகு அரித்தால் சொரிந்து கொள்ள, தினவு கல் நடுதல் போன்றவை அன்பின் உச்சம்.
இன்றோ எங்கு பார்த்தாலும் கண்காணிப்புக் கேமராக்கள். புகழ் பெற்ற ஆலயங்களை, நாம் இன்று பரிகாரத்தலங்களாக மாற்றிவிட்டோம். கடவுளிடம் கூட பேரம் பேசும் நிலைக்கு வந்து விட்டோம். ஜீவ நதி எல்லோருக்கும் பயன்படுவேன் என ஓடுவது போல எல்லோரிடத்தும், அன்பு காட்ட வேண்டும். சுயநலத்தை தூக்கி எறிந்து விட்டு அன்பை விதைக்க வேண்டும். அது எளிதானது அல்ல. மனத்தை நிறுத்தி தவம் இயற்றுவது போல் அன்பைச் செலுத்தி அகிலத்தை ஓர் குடைக்குக் கீழ் கொண்டு வர வேண்டும். இதனை மாணிக்கவாசகர் “பெருங்கருணைப் பேராறே” என குறிப்பிடுவார். முதலில் வீட்டில் இருந்து அன்பை தொடங்குவோம். அக்கம் பக்கத்தில், அலுவலகத்தில் நமது தெருவில் என விரிப்போம். புன்னகை நம்பிக்கையின் அடையாளம். அன்பு மனிதத்தின் முகவரி, நம் முன்னோர் செடி, கொடி, விலங்கு, பறவைகளிடம் கூட அன்பு காட்டினர். நாம் இன்று சக மனிதர்களிடத்திலாவது அன்பைக் காட்டத் துவங்குவோம். ஒருவர் வீழ்ந்துவிட்டால், உடனே அலைபேசி மூலம் படம் எடுக்காமல் உதவிக்கரம் நீட்டுவோம். அத்தகைய அன்பே தான் தவம். அத்தகையோர் இன்புற்று வாழ்வது இயல்பு என்கின்றார் மகாகவி. அவர் அன்பையே சிவமாய்க் கண்டதால் உண்டான கவிதை இது. செய்க தவம் செய்க தவம் நன்னெஞ்சேதவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் உலகில்அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையோர்இன்புற்று வாழ்தல் இயல்பு - என். ஸ்ரீநிவாஸன்.