ஜெருசலேம் ஆலயத்தில் பஸ்கா பண்டிகைக்கான ஏற்பாடு தயாரானது. விழாவின் போது முக்கியஸ்தர்களை அழைத்து விருந்து கொடுப்பது ஊராரின் வழக்கம். அதன்படி இயேசுவை ஒருவர் தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். அவரும் சீடர்களுடன் வந்தார். முக்கியஸ்தரின் வலது பக்கமும், இடது பக்கமும் அமர்ந்து உண்பவர்களை மக்கள் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகக் கருதுவர். சாப்பிடும் முன் கைகள், கால்களைக் கழுவுவதற்கு எழுந்த சீடர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த சீடரான பேதுரு, “நான் வயதில் மூத்தவன்; நானே இயேசுவின் வலது பக்கம் அமர்வேன்” என்றார். மற்றொரு சீடரான யோவான், “நான் இளையவன். சிறியவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நான் இடது பக்கம் அமர்வேன்” என்றார். “நான் பொருளாளர். எனக்கே அந்த இடம்” என்றார் யூதாஸ். மற்றவர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து சண்டையிட்டனர்.
அவர்களின் கூச்சல், விருந்துக்கு அழைத்தவரிடம் பேசியபடி நின்ற இயேசுவின் காதில் விழுந்தது. அவர் தன் அங்கியை கழற்றினார். இடுப்பில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு, அதன் ஒரு முனையைத் தரையை தொடும் அளவுக்கு தொங்கவிட்டார். சீடர்களிடம், “ சாப்பிடும் முன் நீங்கள் கால் கழுவ வேண்டுமல்லவா! ஒரு தட்டை எடுத்து, அதில் சீடர்களை வரிசையாக வரச்சொல்லி கால்களை அதில் வைக்கச் சொன்னார். தண்ணீரை ஊற்றி காலைக் கழுவ ஆரம்பித்தார். சீடர்கள் அதிர்ந்தனர். “ஆண்டவரும், போதகருமான நீங்கள் எங்கள் கால்களை கழுவுவதா? வேண்டாம்” என தடுத்தனர். இயேசு அதை பொருட்படுத்தவில்லை. அனைவரின் கால்களையும் கழுவினார். வயதில் பெரியவரான பேதுருவின் காலைக் கழுவிய போது அழுதே விட்டார். அப்போது “என்னை ஆண்டவர் என்றும், குரு என்றும், போதகர் என்றும் உயர்த்தி சொல்கிறீர்கள். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் யார் ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறாரோ, அவரே உண்மையில் உயர்ந்தவர். நீங்களும் இனி ஒருவர் காலை மற்றவர் அலம்புங்கள். உங்களை தாழ்த்திக் கொள்ளுங்கள்” என்றார் இயேசு. தவறை உணர்ந்த சீடர்கள் தலை குனிந்தனர்.