மயிலாடுதுறை: அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாத அமாவாசையான நேற்று காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத, யாக குண்ட த்தில் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டு நிகும்பலா யாகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.