அருப்புக்கோட்டை: நம் முன்னோர்கள் வாழ்ந்து அவர்கள் விட்டு சென்ற நினைவு சின்னங்கள், எண்ணற்ற கோயில்கள் புராதான சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன. அவற்றை பார்த்து தான் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்கிறோம்.
இன்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாத பல கோயில்கள் உள்ளன. அருப்புக்கோட்டை அருகே உள்ளது கோவிலாங்குளம். இங்கு 12ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் கால கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் இதை அம்பலப்ப சாமி கோயில் என அழைக்கின்றனர். சோழர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் உள்ள இக்கோயில் திருமண்டபம், விமானத்துடன் அமைக்கப்பட்டது. காலப் போக்கில் உருமாறி தற்போது பீடம் மட்டுமே உள்ளது. இதில் 3 சிலைகள் உள்ளன. இவைகள் சமண தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நடுவிலண உட்கார்ந்த நிலையில் உள்ள சிலை சமண தீர்த்தங்கரர் மகாவீரர் சிலை என வரலாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயில் மேடை முழுவதும் உள்ள கற்களில் அக்கால தமிழ் எழுத்து குறிப்புகள் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் மற்ற கோயில்களில் வழிபடுவது போன்று இங்கும் வழிபடுகின்றனர்.