பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
06:07
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. உடுக்கை, தாள, தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி, ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சி கொடுக்க, பக்தர்கள் பரவசத்தில் கைத்தட்டி, ஆரவாரத்துடன் தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா, கடந்த,29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை, நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டப வாயிலில் எழுந்தருள செய்யப்பட்டு, சந்தனம், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, புஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில், உடுக்கை, தாளம், தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளின் தரிசன காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்க கைத்தட்டி, ஆரவாரத் துடன் தரிசனம் செய்தனர்.