பதிவு செய்த நாள்
10
ஜூலை
2019
10:07
காஞ்சிபுரம்: பக்தர்கள் அதிகம் வருவதால், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், 1ல் துவங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.வைபவம் துவங்கியது முதல், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால், மாவட்ட நிர்வாகமும், அத்தி வரதரை தரிசனம் செய்வதில், சில மாற்றங்களை செய்து வருகிறது.வைபவம் துவங்கிய முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் தரிசன இடைவெளி நேரம் ரத்து செய்யப்பட்டது. தவிர, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், இன்று முதல் வரும் நாட்களில், இரவு, 10:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார். முன்னதாக, இரவு, 8:00 மணி வரை, அனுமதி வழங்கப்பட்டிருந்தது.வரதராஜ பெருமாள் கோவிலின், கிழக்கு கோபுரத்தில், இரவு, 9:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.நாளைய தரிசன விபரம்ஆனி கருடசேவை உற்சவம், நாளை நடைபெறவுள்ளது. இதனால், அன்று மாலை, 5:00 மணி வரை மட்டுமே, அத்தி வரதரை தரிசிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.