மதுரை: மதுரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆக.,4 வரை நடக்கிறது. ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு ஆக., 3ல் புட்டுத்தோப்பு வைகை ஆற்றின் கரையில் ஒரு லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடுகின்றனர். இதற்காக ஆற்றின் கரைகளை சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. தீர்த்தமாட வசதியாக ஆற்றின் கரையில் தற்காலிகமாக ஏழு கிணறுகள், புட்டுத்தோப்பு வளாகத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்படும். 12 நாட்கள் நடக்கும் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படும். இதன் மூலம் வைகையை மாசடையாமல் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விழாக்குழு தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.