பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பூசாரிகளை நியமிக்க வேண்டுமென, ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, இம்மாதம், 23 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
விழாவை முன்னிட்டு, கோவிலைச் சுற்றியுள்ள ஊர் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர் வசந்தா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நெல்லித்துறை, தேக்கம்பட்டி, அம்மன் புதுார், வேல் நகர், சமயபுரம், கூடுதுறைமலை, உப்புப்பள்ளம், காந்தி நகர், தொட்டதாசனுார், நஞ்சேகவுண்டன்புதுார் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஊர் மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சிறிய சன்னிதிகளில் பூஜை செய்ய பூசாரிகள் இல்லை.
ஆடிக்குண்டம் விழா நடைபெற உள்ளதை அடுத்து, கோவில் மற்றும் சன்னிதிகளுக்கு உடன டியாக பூசாரிகளை நியமிக்க வேண்டும். கோவிலைச் சுற்றியும், சாலையிலும் பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வசதிகள் செய்ய வேண்டும். கோவிலில் இருந்து தேக்கம்பட்டி சாலையில், காரமடை நீரேற்று நிலையம் வரை சாலையை அகலப் படுத்த வேண்டும். இவ்வாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி, மக்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றார். கோவில் பணியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.