நகரி: யுகாதி தின விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தெலுங்கு புத்தாண்டையொட்டி நேற்று, திரளான பக்தர்கள், திருமலை கோயிலுக்குச் சென்று, வெங்கடேச பெருமாளை தரிசித்தனர். நேற்று காலை, 7மணிக்கு தங்கவாசல் அருகே அர்ச்சகர்கள் ஆஸ்தான நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர், நந்தன ஆண்டு பிறப்பையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டு வரும், புதிய பஞ்சாங்கத்தை படித்து பலன் கூறும் நிகழ்ச்சியும் நடந்தது. யுகாதியை முன்னிட்டு, மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.