பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
01:07
லக்னோ:”அயோத்தியில், கடவுள் ராமருக்கு, உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, உத்தர பிரதேச மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் தெரிவித்துஉள்ளார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, தலைநகர் லக்னோவில், நேற்று 23 ல், மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, யோகி ஆதித்யநாத் கூறியதாவது:கடவுள் ராமர் பிறந்த இடமான, அயோத்தியில், அவருக்கு, பிரமாண்ட சிலை அமைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள, சர்தார் படேல் சிலை தான், தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக உள்ளது; இது, 597 அடி உயரமுடையது.அயோத்தியில், ராமருக்கு அமைக்கப்படவுள்ள சிலை, 823 அடி உயர முடையதாக இருக்கும். அயோத்தியில், 100 ஏக்கர் நிலத்தில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சிலை அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு, குஜராத் மாநில அரசை நாடவுள்ளோம்.சிலை அமையவுள்ள இடத்துக்கு, பக்தர்கள், சுற்றுலா பயணியர் வந்து செல்லும் வகையில், எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.