பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
12:07
ஆடி இரண்டாம் வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில் அலங்கார பூஜைகள் நடந்தன. சுமங்கலி பெண்கள் ஆர்வத்துடன் அம்மன் கோவில்களில் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் வனபத்ரகாளிம்மன் கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைக்குப்பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டனர்.மேட்டுப்பாளையம் - ஊட்டி பிரதான சாலையில் மைதானம் மாரியம்மன் கோவிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பேட்டை மகா மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. உற்சவ அம்மன் அன்னவாகனத்தில் கோவிலை வலம் வந்தார். சிறப்பு அன்னதானம் வினியோகிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் ராஜஅஷ்டவிமோச்சன மகாகணபதி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை அடுத்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த குத்தாரிபாளையம் மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை ஒட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
பெ.நா.பாளையம்பெரியநாயக்கன்பாளையம் அருகே எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாரியம்மன் காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி, ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு, பல வகையான இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அன்னுார் அன்னுார் மாரியம்மன் கோவிலில், நேற்று மதியம் மாரியம்மனுக்கு, அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. மாலையில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. அன்னுார், பெரியம்மன் கோவிலில், நேற்று மதியம் தாசபளஞ்சிக மாதர் சங்கம் சார்பில், 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல திரவிய அபிஷேகமும், பின்னர் அலங்கார பூஜைகள் நடந்தது. சரவணம்பட்டி, கோவை, பீளமேடு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார், மன்னீஸ்வரர் கோவில், அருந்தவச்செல்வி அம்மன் சன்னிதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சூலுார் ஆடி வெள்ளி மற்றும் ஆடி கிருத்திகையை ஒட்டி, சூலுார் வட்டாரத்தில், அம்மன், முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.பழனியாண்டவர் கோவில், அறுபடைவீடு, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சூலுார் சிவன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு, அபிேஷக ஆராதனைகள் நடந்தன. சுவாமி திருவீதி உலா நடந்தது.அதேபோல, மேற்கு மாகாளியம்மன் கோவில், பெரிய மாரியம்மன், அங்காளம்மன், காட்டூர் மாகாளியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். -நமது நிருபர் குழு-