பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
02:07
கரூர்: ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கரூர் பகுதி அம்மன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
கரூர், ஜவஹர் பஜார் மாரியம்மன், வேம்பு மாரியம்மன், பவதியம்மன், தான்தோன்றிமலை பகவதி அம்மன், ஆதிமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், விபூதி முதலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வேம்பு மாரியம்மன் கோவிலில், சுவாமிக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆதி மாரியம்மன் கோவிலில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பகவதியம்மன் கோவிலில், காய்கனிகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலையில் இருந்தே அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.