பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
04:07
முன்னோர் வழிபாட்டுக்குரிய தலம் ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிப்பட்டினம். இங்கு கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் பிதுர் ஆசி கிடைப்பதோடு கிரக தோஷம் அகலும். ஆடிஅமாவாசையன்று பிதுர் உலகில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் தைஅமாவாசை வரை தீர்த்தக் கரைகளில் தங்கியிருப்பர். அவர்களை வரவேற்க இங்கு செல்லலாம்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராமர் இலங்கைக்கு புறப்பட்டார். ஒரு செயலை தொடங்கும் முன் முதற்கடவுளான விநாயகர், நவக்கிரகத்தை வழிபடுவது வழக்கம். இதனடிப்படையில் ராமரும் இலங்கை செல்லும் முன் உப்பூரில் விநாயகரை வழிபட்ட பின் தேவிப்பட்டினம் வந்தார். இத்தலத்தில் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய கடற்கரையில் மணல் எடுத்தார். ஜாதி லிங்கம், மனோசிலை. காந்தம், பூரம், காரம், கந்தகம், வெள்ளை பாஷாணம், கவுரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகிய பாஷாண மருந்துகளையும் கலந்தார். கல்லைப் போல உறுதி மிக்க இந்த கலவையில், நவக்கிரகங்களுக்கு சிலை செய்து கடலுக்குள் பிரதிஷ்டை செய்தார். அப்போது கடல் சீற்றம் அடைந்தது. ராமர் தன் வலதுகையை உயர்த்த கடலின் வேகம் தணிந்தது. ’நவபாஷாணக் கடல்’ என்றும் பெயர் பெற்றது.
ஆடி அமாவாசையை ஒட்டி பத்து நாள் விழா நடக்கும். சனி திசை, ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் கடலில் நீராடி வழிபட்டால் சனியின் கெடுபலன் குறையும். நவக்கிரகங்களைத் தவிர வேறு சன்னதிகள் இங்கில்லை. நவக்கிரகங்களை ஒன்பது முறை வலமாகச் சுற்றி வந்தால் நன்மை பெருகும். நவபாஷாணக் கடலைத் தவிர ராமர், அக்னி தீர்த்தங்கள் இங்குள்ளன. இங்கிருந்து 77 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம், அங்கிருந்து 19 கி.மீ., தூரத்தில் தனுஷ்கோடி உள்ளன. தேவிப்பட்டினம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய முக்கடல்களில் நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர் ஆசியால் நல்வாழ்வு அமையும்.
* எப்படி செல்வது?
* மதுரையில் இருந்து 128 கி.மீ.,
* ராமநாதபுரத்தில் இருந்து 14 கி.மீ.,
தொடர்புக்கு: 04567 – 264 164.