பதிவு செய்த நாள்
03
ஆக
2019
03:08
சேலம்: ஆடி வெள்ளியில், கேட்கும் வரம் கிடைக்கும் என்பதால், பக்தர்கள் திரண்டு வந்து, கூழ் ஊற்றி, மாவிளக்கு வழிபாடு நடத்தி, அம்மனை தரிசித்தனர்.
ஆடி மூன்றாவது வெள்ளியை யொட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் நடை, நேற்று (ஆக., 2ல்) காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், வளையல் சகிதமாக முத்தங்கி அலங்காரத்தில், பெரிய மாரியம்மன் அருள்பாலித்தார்.
பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெருமளவில், அம்மனுக்கு கூழ் வார்த்தும், மாவிளக்கு வழிபாடு நடத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முகூர்த்தகாலில், மஞ்சள் கயிறு, வளையல் கட்டி, கன்னி பெண்கள் திருமண வரம்; திருமண மானவர்கள் குழந்தை பாக்கியம் கேட்டு, வேண்டுதல் வைத்தனர். அதிகளவில் பக்தர்கள் திரண்டதால், பகலில் நடை சாத்தாமல், இரவு, 10:00 மணி வரை, அம்மனை தரிசிக்க அனுமதிக் கப்பட்டனர். செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், மஞ்சள் பட்டு உடுத்தி, மயில் இறகு, அலங் காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் கூழ் ஊற்றி, தயிர் அன்னம் படைத்து, வழிபட்டு, அதை, பிரசாதமாக வழங்கினர்.
உற்சவர் அம்மன், பர்வதவர்த்திணி அலங்காரத்தில், வீதியுலா வந்தார். மாலை, அன்ன வாகனத்தில், அம்மன் புறப்பாடு நடந்தது. மூலவர் அம்மன், தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். அஸ்தம்பட்டி மாரியம்மன் வளையல் அலங்காரம்; குகை மாரியம்மன், யசோதை, கண்ணன், ராமன் அலங்காரத்தில் காட்சியளித்தனர். அதேபோல், மாவட்டத் திலுள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று (ஆக., 3ல்) தலையாடி: பவானி கூடுதுறை, கன்னியாகுமரி, முக்கூடலில் இருந்து, புனித நீர் கொண்டு வந்து, நேற்று (ஆக., 2ல்), கோட்டை பெரிய மாரி கருவறையில் வைக்கப்பட்டது. தலையாடியான இன்று, புனிதநீரால், மாரிக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, சிறப்பு அலங் காரத்தில் காட்சி தருவார். அதனால், புதுமண தம்பதி, புத்தாடை சகிதமாக, வீட்டில், பெற்றோர் ஆசி பெற்று, பின், ஒருசேர அம்மனை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால், பீடைகள் விலகி, நோயற்ற ஆரோக்கிய வாழ்வு கிட்டும். தங்கு, தடையின்றி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.
7 தற்காலிக உண்டியல்: ஆடி, 21 முதல், 23 வரை, பொங்கல் வைபவம் நடக்கவுள்ளதால், திரளான பக்தர்கள் வருவர். அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. அதனால், நேர்த்திக்கடன், காணிக்கை செலுத்த வசதியாக, ஐந்து நிரந்தர உண்டியலுடன், தற்போது, கூடுதலாக, ஏழு இடங்களில், தற்காலிக உண்டியல் வைக்கப்படுகிறது.
திருவிளக்கு பூஜை: ஆத்தூர், கோட்டை அகழிமேடு, சம்போடை வனப்பகுதி, மதுரகாளியம் மன் கோவிலில், 17ம் ஆண்டு, தீப லட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. 430 பெண்கள், தீப விளக்கு ஏற்றி வைத்து, வழிபட்டனர். மதுரகாளியம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்கார த்தில் அருள்பாலித்தார். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப் பட்டது.
வனப்பகுதி கண்காணிப்பு: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, சேலம் உள்பட சுற்றுப் பகுதி மாவட்டங்களிலிருந்து, திரளான பக்தர்கள், இன்று, மேட்டூர் வருவர். மேட்டூர் அணை, கொளத்தூர், கோனூர், மேட்டூர் நீர்பரப்பு அருகில் வனப்பகுதி உள்ளது. பொது இடங்களில், கண்காணிப்பு கூடுதலாக இருக்கும் என்பதால், இளைஞர்கள் கூட்டம், மது அருந்த, வனப் பகுதியில் நுழைய வாய்ப்புள்ளது. இதனால், சட்டவிரோத செயல்களை தடுக்க, வனத்துறை சார்பில், மேட்டூர் வனச்சரகத்தின், 20 காவலர்கள், காப்பாளர்களை, அணை கரையோர வனப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.