சிவகங்கை : காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலய ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஆக., 2ல்) தேரோட்டம் நடந்தது.
இங்குள்ள சொர்ணவல்லி அம்பாள் சன்னதியில் ஜூலை 25 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர உற்ஸவ திருவிழா துவங்கியது.
அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் தினமும் வீதி உலா வந்தார். விழாவின் 9ம் நாளான நேற்று (ஆக., 2ல்) காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் எழுந்தருளினார்.
காலை 9:50 மணிக்கு தேரின் வடத்தை பக்தர்கள் இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி 10:35 மணிக்கு நிலையை அடைந்தது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 12ம் திருநாளான ஆக.5 ம் தேதி காலை 12:00 மணிக்கு சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் திருக்கல்யாணம், அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடைபெறும். கோயில் கண் காணிப்பாளர் சரவண கணேசன் விழா ஏற்பாடுகளையும், பூஜைகளை ஸ்தானிகம் காளீஸ்வர குருக்களும் செய்து வருகின்றனர்.