திருநெல்வேலி: குற்றாலம், குற்றாலநாதர் கோயில் சித்திரசபை வளாகம் ஆடு அறுக்கும் இடமாக மாறி பக்தர்களை முகம் சுளிக்கச்செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகரால் பாடப்பட்ட தலமாகும். இக்கோயிலில் தெப்பக்குளத் துடன் அமைந்துள்ள சித்திர சபை, நடராஜர் திருநடனம் புரிந்து ஐந்து சபைகளில் ஒன்றாகும். முழுவதும் சித்திரங்களால் ஆன திருவிளையாடல் காட்சிகள் ரம்மியானவை. மூலிகை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் நமது கலாசாரத்தை பறைசாற்றுகின்றன. சித்திரசபை அமைந்துள்ள வீதியில் ஐப்பசி மற்றும் சித்திரை மாதங்களில் தேரோட்டம் நடக்கும். குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் ஆடு, கோழிகளை அங்கேயே அறுத்து சமையல் செய்கின்றனர். சாப்பிட்டுவிட்டு இலைகளை வீசிச் செல்கின்றனர். கோயில் வளாகம் ஆடு அறுப்பு மனை போல ரத்த வாடை வீசுகிறது. எனவே கோயில் நிர்வாகமும், பார்க்கிங் குத்தகை எடுத்தவர்களும் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.