சாத்துார்:சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா கொடியேற்றம் காலை 10:00 மணிக்கு நடந்தது.
காசிவிஸ்வநாதபட்டர், முத்துக்குமாரபட்டர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து கொடியேற்றினர். உதவி ஆணையர் கருணாகரன் தலைமை வகித்தார். முன்னாள் பரம்பரை அறங்காவலர் பூஜாரிக் குழு தலைவர்கள் ராஜேந்திரன்பூஜாரி, ராமமூர்த்திபூஜாரி முன்னிலை வகித்தனர். மாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் கோயில் வாசலில் வேப்பிலைக்கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து நாள் தோறும் அம்மனுக்கு சிறப்புஅபி ஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் ரிஷபவாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 16 பகல் 1:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.