மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 151 ஆண்டுகளாக பழமை மாறாமல் மஞ்சள் தண்ணி ஊற்றும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்ஸவ பொங்கல் விழா துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,பறவைகாவடி,அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் வழிப்பட்டனர். அம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தெருக்களில் மாமன்,மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும், முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் தண்ணியை உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர். இதனால் அந்த தெருக்களில் ஆண்களும்,பெண்களும் துள்ளி குதித்து ஓடிச் சென்று தங்களது உறவினர்கள் மீது மஞ்சள் தண்ணியை ஊற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பலர் வீடுகளுக்குள் ஒளிந்திருந்தாலும் அவர்களை தேடிச் சென்றும் மஞ்சள் தண்ணியை ஊற்றினர்.