பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
காரமடை: ஆடி மாத, சுக்ல பட்ஷ ஏகாதசியை முன்னிட்டு, காரமடை ரங்கநாதர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, புண்ணியாக வசனம், விஷ்வக்சேனர், நவ கலசம், ஆவாகனம் முடிந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, ரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்தி களுக்கு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள், மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. மேள தாளங்கள் முழங்க, கோவிலின் பிரகாரத்தில், ரங்கநாதர் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், மஞ்சள் பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், சாற்றுமுறை சேவிக்கப்பட்டு, வைபவம் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.