ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரெங்கநாதரை தரிசித்தனர். வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் பெரியகோவில் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆதிபிரம்மா திருநாள் விழாவான பங்குனி தேரோட்ட விழா நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கநாதர் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தை நான்கு மணிக்கு அடைந்தார். இதைத்தொடர்ந்து காலை 4.45 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பிறகு காலை 6.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைந்தார். ஸ்ரீரெங்கநாதர் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு வந்து ஸ்ரீரெங்கநாதரை தரிசித்தனர். ஆதிபிரம்மா திருநாள் என்றழைக்கப்படும் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 30ம் தேதி ஜீயபுரம் புறப்பட்டுச் செல்கிறார். ஆறாம் நாள் விழாவான ஏப்ரல் வரும் இரண்டாம் தேதி ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் எழுந்தருள்கிறார். ஐந்தாம் தேதி பங்குனி உத்திரம் அன்று சேர்த்தி சேவை நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீரெங்கநாதரும், ஸ்ரீதாயாரும் பங்குனி உத்திர மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். மறுநாள் ஆறாம் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றது. ஏழாம் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் பங்குனி தேரோட்ட விழா நிறைவடைகிறது.