பழநி : பழநி மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்றும் 13 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின் உச்சிமாகாளியம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது.
வெள்ளித் தேரோட்டம்: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழாவையொட்டி தினமும் நுாறாயிரம் மலர்களால் அர்ச்சனை நடந்தது. ஆக.,11 ல் லட்சார்ச்சனை பூர்த்தி யாகபூஜையில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது. நேற்று ஆடி கடைசிவெள்ளி நாளில் பெரியநாயகியம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் செய்து, கஸ்துாரி யானை முன்செல்ல, நான்கு ரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடந்தது.