பதிவு செய்த நாள்
29
மார்
2012
11:03
சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைபிடாரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று, பக்தர்கள் அலகு குத்தி விமான ஊர்வலம் வந்தனர். சேலத்தில் குமாரசாமிப்பட்டியில் உள்ள, எல்லை பிடாரிஅம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும். கடந்த 20ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று முன் தினம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். அம்மனிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்தல், அக்னி குண்டம் இறங்குதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர். நேற்று, வேண்டுதல் நிறைவேற வேண்டியும், வேண்டுதல் நிறைவேறியவர்களும் அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். பலர் அலகு குத்தி விமான ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர். இன்று, ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வழிபாடு நடத்த உள்ளனர். முன்னதாக, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு அம்மன் ஊர்வலமாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யஉள்ளனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்தி, உதவி ஆணையர் வரதராஜன், மண்டல உதவி தணிக்கை அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் தலைமையில் நடந்து வருகிறது.