சின்னமனுார் : குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார பெருந்திருவிழாவை தலைமை அர்ச்சகர் கொடியிறக்கி நிறைவு செய்தார். குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார பெருந்திருவிழா ஜூலை 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் ஆக., 2ல் நடந்தது. நேற்று 5வது ஆடி சனிவாரத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குச்சனுார் ராஜ வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டதால், சுரபி நதியில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர். தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து , மாலை 6:30 மணிக்கு கொடியிறக்கினார். அத்துடன் இந்தாண்டு பெருந்திருவிழா நிறைவடைந்தது.
திருமலை ஜெயபால் முத்து கூறுகையில், இந்தாண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி சனிவார பெருந்திருவிழாக்களில் சுவாமி தரிசனம் செய்தனர். கொடியிறக்கி திருவிழா நிறைவடைந்ததால் இனி வழக்கமான பூஜைகள் நடைபெறும், என்றார்.பெரியகுளம்: பாம்பாறு ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி கடைசி சனிக்கிழமை பூஜை நடந்தது. சுவாமி, யோக ஆஞ்சநேயராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். வெற்றிலை மாலை, வடைமாலை, துளசிமாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் செய்திருந்தார்.