சிவகங்கை : காளையார்கோவில் காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேகரிக்க ஏதுவாக ’நீரின்றி அமையாது உலகு’ வாட்ஸ் ஆப் குழுவினர் சார்பில் 6 கி.மீ., துாரத்திற்கு வரத்து கால்வாய் துார்வாரும் பணியை துவக்கியுள்ளனர்.இங்குள்ள காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
மேப்பல் பகுதியில் சேகரமாகும் மழை நீர் பெருக்கெடுத்து 6 கி.மீ., துாரம் கால்வாய் வழியே வந்து குளத்தை நிரப்பும். அவ்வப்போது பெய்யும் மழைக்கு குளத்தில் சொற்ப அளவில் மழை நீர் சேகரமாகியுள்ளது. மேப்பலில் இருந்து தடையின்றி தண்ணீர் வர ஏதுவாக வரத்து கால் வாயை சுத்தம் செய்து, ஆழப்படுத்த ’நீரின்றி அமையாது உலகு’ வாட்ஸ் ஆப் குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக ஆக.,15 கிராம சபைக்கு வந்த கலெக்டர் ஜெயகாந்தனிடம் அனுமதி கேட்டனர். அவரது அனுமதியுடன் நிதி திரட்டி இயந்திரம் மூலம் 3 கி.மீ., துாரத்திற்கு துார்வாரியுள்ளனர்.
தொடர்ந்து மேப்பல் வரை துார்வார முடிவு செய்துள்ளனர்.ஆதரவு கரம் நீட்டும் மக்கள் காளை யார்கோவில் ஏ.முனியசாமி கூறியதாவது: கலெக்டர் அனுமதிக்கு பின் தாசில்தார் சேதுநம்பு, வி.ஏ.ஓ., ரத்தினம், தன்னார்வ அமைப்புகள், நகர் மக்களின் முழு ஆதரவோடு வரத்து கால் வாயினை துார்வாருகிறோம். மேப்பல் கண்மாய் நிரம்பி வழியும் பட்சத்தில் குளத்திற்கு இடையூறின்றி மழை நீர் வந்து சேரும், என்றார்.