பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
சேலம்: சேலம் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், உத்தமசோழபுரம், கணக்குபிள்ளை காட்டிலுள்ள, பழமையான முத்து முனியப்பன், முனீஸ்வரி கோவில் சீரமைக்கப்பட்டு, புதிதாக பாலகணபதி, குதிரை வாகனம் ஸ்தாபித்து, அதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 1ல், முகூர்த்த கம்பம் நடுதலுடன் தொடங் கியது. நேற்று 11ம் தேதி காலை, 6:00 மணிக்கு, நான்கு கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி யுடன் நிறைவடைந்தது.
அதில் பூஜித்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள், மேள தாளம் முழங்க, கோவிலில் வலம் வந்து, காலை, 7:00 மணிக்கு மேல், பாலகணபதி, முனியப்பன், முனீஸ்வரி சிலை களுக்கு, புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மேலும், புதிய ரூபாய் நோட்டு அலங்காரத்தில், முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
கந்தசாமி கோவிலில்...: கருப்பூர், கந்தசாமி கோவிலில், கடந்த, 9ல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று 11ம் தேதி காலை, 9:45 மணிக்கு, திரளான பக்தர்கள் முன்னிலையில், ராஜகோபுரம், மூலஸ்தன கோபுரங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
பின், ஓமலூர் தீயணைப்பு வாகனம் மூலம், திரளான பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதேபோல், தலைவாசல், நத்தக்கரை, செல்வ மகா மாரியம்மன் கோவிலில், நேற்று 11ம் தேதி காலை, கும்பாபிஷேகம் நடந்தது. வேதமந்திரம் முழங்க, சிவாச்சாரியார்கள், கலசங்களுக்கு, புனித நீரூற்றினர். மேலும், ஆறகளூரில் உள்ள, கருப்பண்ண சுவாமி, அய்யனார் கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
ஷீரடி சாய்பாபாவுக்கும்...: வாழப்பாடி, சாய்பாபா அறக்கட்டளை சார்பில், மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு, தியான மண்டபத்துடன், கோவில் அமைக்கப்பட்டது. அங்கு, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து, 4 அடி உயரத்தில், வெலிங்ஸ்டன் பளிங்கு கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஷீரடி சாய்பாபா சிலை கொண்டு வரப்பட்டு, ஆகமவிதிப்படி, நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதேபோல், ஆஞ்சநேயர், ராஜகணபதி, மும்மூர்த்தி தத்தாத்தியார் சுவாமி சிலைகளும், பிரதிஷ்டை செய்யப்பட்டன. அக்கோவில் கும்பாபிஷேக விழா, சுவாமி கண்திறப்பு நிகழ்ச்சி, நேற்று 11ம் தேதி நடந்தது. அதில், மூலவர் ஷீரடி சாய்பாபா, சாந்த ஆஞ்சநேயர், ராஜகணபதி, தத்தாத்திரியார் சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். திரளானோர் தரிசனம் செய்தனர்.
திருவீதி உலா: பெத்தநாயக்கன்பாளையம், சுப்பராய படையாச்சியூரில், செல்லியம்மன், விநாயகர், கந்தசாமி கோவில்களின் கும்பாபிஷேக ஆண்டு விழா, நேற்று முன்தினம் 10ம் தேதி நடந்தது. அதில், செல்லியம்மன், விநாயகர், கந்தசாமி கோவில்களில் உள்ள மூலவர் களுக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மேள தாளம் முழங்க, திருவீதி உலா நடந்தது.