பதிவு செய்த நாள்
19
செப்
2019
03:09
திருப்பூர் : நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள, தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தில் கொலு பொம்மை விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசை முதல் நவராத்திரி திருவிழா துவங்கிவிடும். தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் வீட்டில் கொலு வைத்து வழிபடுவது ஜதீகம். வரும் 28ம் தேதி முதல் நடப்பாண்டு நவராத்திரி பண்டிகை துவங்க உள்ளதால், திருப்பூர் கடைவீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.
சர்வோதய சங்க கிளை மேலாளர் பூபதி கூறியதாவது:கைவினைக்கலைஞர்களின் கலைநுட்படத்தால் காகிதக்கூழ், பளிங்கு கற்கள், மாக்கல், களிமண் போன்ற பொருட்களில் வடிவமைக்கப்பட்டுள்ள பொம்மைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கல்யாண செட் பொம்மைகள், குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரையில் கிடைக்கும்.பீங்கான் மண் பொம்மைகள் முதல் மிகப்பெரிய சுடுமண் பொம்மைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. களிமண் பொம்மைகள் மதுரையில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அம்மன், விஷ்ணு, பள்ளிகொண்ட பெருமாள் பொம்மைகளை அதிகளவு மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாண்டு, கிருஷ்ணர் ஹம்ச வதம், நாரை வதம், அஷ்ட பாலகர், அஷ்ட பைரவர், திருப்பதி அன்னப்பெருமாள் போன்றவை புதுவரவாக வந்துள்ளன. தவிர, நவகிரகம், ராமர் பட்டாபிசேகம், பள்ளி செட், சொர்க்கவாசல், சயன பெருமாள், கிருஷ்ண லீலை போன்ற பொம்மைகள் கண்கவர் வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. கொலு வைப்பதற்காக படிகட்டுகள் 5 அடி முதல் 7 அடியில் விற்பனைக்கு உள்ளதால், ஆர்வத்துடன் மக்கள் வாங்கிச்செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.