பதிவு செய்த நாள்
20
செப்
2019
12:09
உடுமலை: உடுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள, ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியில், ஏழுமலையான் கோவில் உள்ளது. வனத்தில், 4.5 கி.மீ., துாரம் உள்ள இக்கோவிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும், பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.
இந்தாண்டு, வரும்,21 ம் தேதி, முதல் சனிக்கிழமை துவங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் பகுதியில், குடிநீர், வரிசை தடுப்புகள் என, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழுவதும் மலைமேல் அமைந்துள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கும் சுற்றுசூழலுக்கும் கேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த, வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களிடமிருந்து, பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்படும்; எனவே, துணி, சணல் பைகளை பக்தர்கள் கொண்டு வர வேண்டும்.வனப்பகுதியில் குப்பைகள் போடுவதை தடுக்க, வழி நெடுகிலும், குப்பை தொட்டிகள், விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
வனச்சரக அலுவலர் தனபாலன் கூறுகையில், பக்தர்கள் வனப்பகுதியில் குப்பைகள் வீசக்கூடாது. குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துணி பைகளை மட்டுமே கொண்டு வர வேண்டும்.மலையடிவாரத்திலேயே, பிளாஸ்டிக் கவர்கள் பெற்றுக்கொண்டு, மக்கும் பை வழங்கப்படுகிறது. வாகனங்கள், வனத்துறை சோதனை சாவடி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு, வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.