திருப்புவனம்:- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தையவை என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த 4ம் கட்ட அகழாய்வு முடிவுகளை தமிழக தொல்லி யல்துறை கமிஷனர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார்.அதில் 4ம் கட்ட அகழாய்வை 2018 ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் வரை 55 லட்ச ரூபாய் செலவில் தமிழக தொல்லியல்துறை நடத்தியது. இதில் தங்க காதணி, சங்கு வளையல்கள், செங்கல் கட்டுமானம், எலும்புகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இப்பொருட்களின் காலம் அறிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா பகுப்பாய்வு மையத்திற்கு கார்பன் டேட்டிங் முறைக்கும் பானை ஓடுகள் இத்தாலிக்கும் எலும்பு துண்டுகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லுாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆய்வின் முடிவுகீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முந்தை யவை. கி.மு. 600ம் ஆண்டைச் சேர்ந்தவை என அறிவித்துள்ளனர். கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன. பானை ஓடுகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் கி.மு.580 ஆண்டு காலத்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்க கால தமிழர்கள் விவசாயம் நெசவு பானை பொருட்கள் உள்ளிட்டவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
விவசாயம் செறிந்த பகுதிகீழடி விவசாயம் செறிந்த பசுமையான பகுதியாக இருந்துள்ளது. வீடுகள் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மிகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யுள்ளனர். செங்கல் கட்டுமானத்திற்கு மிருதுவான களிமண் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த களிமண்ணில் சிலிகான் சுண்ணாம்பு மக்னீசியம் நிறைந்துள்ளன. எனவே தான் 2600 ஆண்டுகளை கடந்தும் கட்டடம் உறுதியாக உள்ளது. விவசாயத்திற்கு துணையாக காளை எருமை வெள்ளாடு உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளனர். மயில் பன்றி கலைமான் உள்ளிட்டவற்றையும் வளர்த்திருப்பது தெரியவந்துள்ளது.
விலங்கின் எலும்புகள் கீழடியில் கிடைத்த எலும்பு துண்டுகளில் இந்த வகை விலங்குகளின் எலும்புகள் அதிகமாக உள்ளன. சங்க கால தமிழர்கள் உணவு உடை உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். நெசவு தொழில் சமையல் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றதற்கு சான்றாக பானைகள் நெசவு தொழிலுக்கு சான்றாக தக்கலை சுடுமண் குண்டு எலும்பால் ஆன வரைகல் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
கல்வியில் சிறப்புகல்வியறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள் பானைகளை சுட்டு அதன் மேல் கீறல் போன்ற எழுத்துகளை எழுதியுள்ளனர். பச்சை மண்ணில் எழுதி அதன் பின் பானைகளை சுட்டும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு சான்றாக ஆதன் குவிரன் உள்ளிட்ட பெயர்களை கண்டறிந்துள்ளனர்.
விளையாட்டு பொருட்கள் பெண்கள் அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் சங்க கால தமிழர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் வசதியாகவும் நாகரீகமாகவும் வாழ்ந்துள்ளனர் என தெரியெவந்துள்ளது. நான்காம் கட்ட அகழாய்வில் சங்க கால தமிழர்களின் வழிபாடுகள் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.