பதிவு செய்த நாள்
06
ஏப்
2012
10:04
இயேசு உயிர் நீத்ததை நினைவுகூரும் புனித வெள்ளி ஆராதனை, கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நடக்கிறது. சிலுவை சுமந்து, கல்வாரி மலையின் உச்சிக்கு இயேசு இழுத்து செல்லப்பட்டபோது அடைந்த துயரங்களை நினைவுகூரும் "சிலுவைப் பாதை நிகழ்ச்சி, ஆலயங்களில் இன்று நடக்கிறது. திண்டுக்கல் புனித வளனார் கதீட்ரல் ஆலயத்தில், மாலை 5 மணிக்கு, பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிலுவைப் பாதை, திருச்சிலுவை ஆராதனை நடக்கும். இயேசு உயிர் நீத்ததை போன்ற உருவச்சிலை பவனி, ஆராதனைகள் இரவு 11 மணிக்கு நடக்கின்றன.
இரு நண்பர்கள் ரோட்டோரத்தில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். அவ்வழியாக வந்த காவலர்கள் இருவரையும் பிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இருவரில் ஒருவர் பணக்காரர். அவருடைய அப்பாவுக்கு இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக பணத்தை செலுத்தி தன் மகனை அழைத்துச் சென்றார். இன்னொரு வாலிபன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனது குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளாயிருந்தது. அப்பா இறந்துவிட்டார். உறவினர்கள் கைவிட்டுவிட்டனர். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தார். அவரும் பலவீனமானவர். அவருக்கு இந்த தகவல் கிடைத்தவுடன், அழுகையோடு, தன் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என நினைத்து, கல் உடைக்கும் வேலையில் இரவு பகலாக உழைத்தார். ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். கை கால்களில் பலமாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பல நாட்கள் சாப்பிடவில்லை மயக்கத்தில் கீழே விழுந்துவிட்டார்.மயக்கம் தெளிந்தவுடன், ""என் மகனை நான் காப்பாற்றப் போகிறேன், என்று சொல்லி சந்தோஷமாக வந்து அபராதத்தை கொடுத்து தன் மகனை மீட்டார். பல நாட்கள் சாப்பிடாமல் மிகவும் மெலிந்த நிலையில் கை கால்களில் கல் உடைத்த ரத்தக்காயத்தோடு வந்திருந்த தனது தாயை பார்த்த அந்த வாலிபன் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தான். அவனுடைய தாயார் அவனிடம், ""கவலைப்படாதே! நான் உன்னை மீட்டுக் கொண்டேன். இனி நீ இப்படிப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது, என்று சொல்லிக் கொண்டே மரித்துப்போனார்.
அன்றிலிருந்து அவ்வாலிபன் பாவம் செய்வதில்லை. காரணம் அவனுக்கு பாவ எண்ணம் வரும் போதெல்லாம் அவனுடைய தாயாரின் உயிர் தியாகம், கை, கால்களில் இருந்த ரத்தக்காயம் நினைவுக்கு வந்தது. இதைப்போலவே நாம் பாவம் செய்து பிசாசுக்கு அடிமைகளாக இருந்த போது, நம்முடைய கூக்குரலை கேட்ட தேவன் நம்மை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்பு கொடுத்தார். அவர் சிலுவையில் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும் துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார். மெய்யாகவே, அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
நாமெல்லோரும் ஆடுகளைப் போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை திறக்கவில்லை. (ஏசாயா 53:2-7) புனிதவெள்ளி நாளான இன்று, இயேசு கிறிஸ்துவின் தியாக காட்சி உங்கள் கண் முன் தோன்ற வேண்டும். அவருடைய ரத்தத்தினாலே நாம் மீட்கப்பட்டு இப்பொழுது இயேசுவின் பிள்ளைகளாயிருக்கிறோம். இதை கண்டு பிசாசு மீண்டுமாய் நமக்கு பாவ சோதனைகளை கொண்டு வருகிறான். இந்த நேரத்தில், நம் கண் முன்பாக சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும் இயேசுவின் காட்சியை நினைத்து பார்க்க வேண்டும். பாவத்திற்கு சிவப்பு கொடியையும் இயேசு கிறிஸ்துவுக்கு பச்சை கொடியையும் காட்டுங்கள். சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!! நாம் பாவம் செய்யும் பொழுதெல்லாம் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைகிறோம் என்பதை மறந்து போகாதிருங்கள்.
- பரமன்குறிச்சி பெ. பெவிஸ்டன்