நாகர்கோவில்: தமிழக, கேரள நட்புறவின் அடையாளமாக பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. அப்போது இருமாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி தேவி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சிலை என்பது வரலாறு.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்ட பின், சரஸ்வதிதேவி சிலை பவனியாக எடுத்து செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும் மரபுப்படி இந்த விழா, இருமாநில நட்புறவின் அடையாளமாக நடக்கிறது. நேற்று காலை 7:50 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடந்நப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர், மன்னரின் வாளை எடுத்து குமரி மாவட்ட தேவசம் துணை ஆணையர் அன்புமணியிடம் கொடுத்தனர். அந்த வாள் ஏந்தியவர் முன்செல்ல, சரஸ்வதிதேவி யானை மீதும், முருகன், முன்னுதித்த நங்கை பல்லக்கிலும் வைக்கப்பட்டு பவனி புறப்பட்டது. பின்னர் அரண்மனை முன்வாசலில் பவனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தமிழக – கேரள போலீசார் துப்பாக்கிகை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்களுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் சங்கரதாஸ், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று குழித்துறையில் தங்கிய பவனி இன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சென்றடையும். நாளை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடையும். செப்., 29 நவராத்திரி பூஜை தொடங்கும்.