ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில் பெய்த மழையினால், பக்தர்கள் மலையேறுவதற்கு 30 நிமிடம் அனுமதி மறுக்கப்பட்டனர். புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேறிய நிலையில், காலை 11:30 மணிக்கு மேல் மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நிலை உருவானது. இதனால் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக கீழிறங்கினர்.
இந்நிலையில் மதியம் 2:00 மணிக்கு மழை பெய்யத் துவங்கியதால், பக்தர்கள் மலையேறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால், மலையின் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. மழை நின்றபின் மீண்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 800 பக்தர்கள் கோயிலுக்கு சென்று திரும்பினர். இன்று மஹாளய அமாவாசை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மழை பெய்தால் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைத்தும், மழைவிட்ட பிறகு மீண்டும் அனுதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.